இறைவன் ஒருவனே என்பது சைவ சமயத்தின் அடிப்படைக் கொள்கை. உலகில் தோன்றிய பெரும்பாலான சமயங்களின் கொள்கையும் அதுவே.
இறைவன் இருக்கிறான் என்பதைப் பார்த்தோம். இந்த புவனங்களைப் படைத்து காத்து அழித்து அருள் செய்கிறான் என்பதையும் பார்த்தோம். எவன் ஒருவனால் இந்த பேரண்ட புவனங்களை அழிக்க முடியுமோ, அவனாலேயே அதை திரும்ப அமைக்கவும் முடியும். உதாரணமாக, ஒரு நிறுவனத்தை யார் வேண்டுமாயினும் தொடங்கலாம். அதை யார் வேண்டுமாயினும் நடத்தலாம். ஆனால், இந்த நிறுவனத்தை எந்த காரணத்திற்க்காகவும் ஒருவன் எப்போது வேண்டுமானாலும் மூடி விடலாம், நிறுத்தலாம் என்கிற நிலையில் அவனே அந்த நிறுவனத்தின் தலையெழுத்தை எழுத வல்லவனாகிறான். அந்த நிறுவனத்தை நிறுத்த வல்லவனால், பல நிறுவனத்தை கட்டி எழுப்பவும் முடியும்.
அது போலவே, எவன் ஒருவனால் இந்த அண்ட புவனங்களையெல்லாம் ஒடுக்கித் தம்முள் கொள்ள முடியுமோ, அவனாலே, அதைத் திரும்பவும் உருவாக்க முடியும். அதன் தலையெழுத்தை நிர்ணயிக்க முடியும். ஆகவே, இந்த பேரண்ட புவனங்களையெல்லாம் சிவபெருமான் ஒருவனாலேயே ஒடுக்க முடியும். பேரூழிக்காலத்தில் (மகா சங்காரகம்) அத்தனை புவனங்களும் அவனிடம் ஒடுங்கி விடும். பிரம்மன், திருமால், இந்திரன் என்று அத்தனை பேரும் சிவபெருமானிடத்தில் ஒடுங்கிப் போவர். சிவபெருமான் ஒருவன் மட்டுமே நிலைத்திருப்பான். அவன் விருப்பத்தினாலேயே அடுத்த படைப்புத் தொழிலை ஏவுவான்.
ஒரு பிரம்மனின் ஆயுள் 100 கோடி ஆண்டுகள். 100 பிரம்மனின் ஆயுள் ஒரு திருமாலின் ஆயுள். 100 திருமாலின் ஆயுள் ஒரு உருத்திரனின் ஆயுள் என்பார் வாரியார் சுவாமிகள். இப்படி இந்த அநாதியான புவனங்களில் நூறு கோடி பிரம்மர்கள் தோன்றி மறைந்து விட்டனர். ஆறு கோடி நாராயணர்கள் தோன்றி மறைந்து விட்டனர்.
நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்
ஆறு கோடி நாராயண ரங்ஙனே
ஏறு கங்கை மணலெண்ணி லிந்திரர்
ஈறி லாதவன் ஈச னொருவனே
- ஐந்தாம் திருமுறை, திருநாவுக்கரசர்
பொழிப்புரை:
நூறுகோடி பிரமர்கள் அழிந்தனர் ; ஆறுகோடி திருமால்களும் அங்ஙனமே ஆயினார்கள் ; நீர் பொங்கிப்பெருகும் கங்கையாற்று மணலைவிட எண்ணிக்கையற்ற இந்திரர் நிலையும் அவ் வண்ணமே ; முடிவற்றவனாய்த் திகழ்பவன் ஒப்பற்றவனாகிய இறைவன் சிவபெருமான் மட்டுமே.
ஆகவே, ஒப்பற்ற தலைவன், எட்டு குணங்களை உடையவன், பிறப்பு இறப்பு, முதலும் முடிவும் இல்லாத முழுமுதற் பரம்பொருள் சிவபெருமான் மட்டுமே என்பது தெளிவாகும்.
திருச்சிற்றம்பலம்